லண்டன்: பிரிட்டனில் அடுத்த நாடாளுமன்றத்தின் இறுதிக்குள், 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் பல்லாண்டுகால பழமையான கட்டாய தேசிய சேவையை மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரப் போவதாக கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “இது ஒரு சிறந்த நாடு. ஆனால், இளம் தலைமுறையினருக்குத் தகுதியான வாய்ப்புகளோ அனுபவமோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதிகரித்துவரும் நிச்சயமற்ற இந்த உலகில் நமது சமூகத்தைப் பிளவுபடுத்தும் சக்திகள் உள்ளன,” என்று கூறினார்.
கட்டாய தேசிய சேவையின்படி, 18 வயதுடையவர்கள் ஆயுதப்படைகளில் அல்லது இணையத் தற்காப்பில் ஓராண்டுக்கு முழுநேரமாக பணியமர்த்தப்படுவதையோ, ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒரு வாரயிறுதியில் சமூகத்தில் தொண்டு செய்வதையோ தேர்வுசெய்ய வேண்டும்.
2025 செப்டம்பரில் முன்னோடித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் தொடங்க உதவும் வகையில் அரச ஆணைக்குழு ஒன்றை கன்சர்வேட்டிவ் கட்சி உருவாக்கும்.
அதன் பின்னர் அடுத்த நாடாளுமன்றத்தின் இறுதிக்குள் புதிய தேசிய சேவை சட்டத்தின் வழியாக இந்தக் கட்டாய தேசிய சேவை அறிமுகப்படுத்தப்படும்.
பிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி பொதுத் தேர்தலை எதிர்பாராத விதமாக அறிவித்த திரு சுனக், இவ்வாண்டின் பிற்பாதியில் வாக்களிப்பு குறித்த எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்தார். அதையடுத்து, துணிச்சலான புதிய செயல்திட்டம் ஒன்றை அமைக்க அவர் முயன்று வருகிறார்.
ஆனால், இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு திரு சுனக் அவரது கட்சியின் எதிர்பார்ப்புகளை முறியடித்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், எதிர்கால நாடாளுமன்றத்திலும் ஒரு தீவிரமான விவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த முன்மொழிவு மூலம், ஒரே மாதிரியான கட்டாய தேசிய சேவை திட்டங்களைக் கொண்டுள்ள இஸ்ரேல், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுடன் பிரிட்டன் இணைவதை எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, பிரிட்டன் கட்டாய தேசிய சேவையைக் கடைசியாக அறிமுகப்படுத்தி இருந்தது. 1960களில் அத்திட்டத்தை அந்நாடு ரத்து செய்தது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராணுவம் சுருங்கிவிட்டது. 2012ல் 110,000ஆக இருந்த முழுநேர ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 2023ல் 85,000ஆகக் குறைந்தது.

