கெய்ரோ: இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்துவிட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளதை இஸ்ரேல் மறுத்துள்ளது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெற்ற சண்டையில் தமது ஆயுதப் படைப் பிரிவின் வீரர்கள், இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்துவிட்டதாக ஞாயிற்றுக் கிழமை அன்று (மே 26) ஹமாஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எத்தனை இஸ்ரேலிய வீரர்கள் பிடிபட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.
“சுரங்கத்துக்குள் பதுங்கியிருந்த எங்களுடைய வீரர்கள், இஸ்ரேலியப் படை வீரர்களை ஈர்த்துக் கொண்டு சென்றனர். இஸ்ரேலியப் படை அதன் அனைத்து உறுப்பினர்களையும் காயத்துடனும் உயிரிழப்புடனும் இழந்த பிறகு எமது படை மீட்டுக்கொள்ளப்பட்டது,” என்று அல் காஸ்ஸாம் படைப் பிரிவின் பேச்சாளர் அபு உபைதா தெரிவித்தார். அவரது பதிவு செய்யப்பட்ட செய்தியை அல் ஜசீரா மே 26ஆம் தேதி ஒளிபரப்பியது.
ஆனால் ஹமாஸ் ஆயுதப் படை கூறுவதை இஸ்ரேல் மறுத்துள்ளது.
வீரர்கள் கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இஸ்ரேலிய தற்காப்புப் படை (ஐடிஎஃப்) தெளிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ரத்த வெள்ளத்தில் இருக்கும் ஒருவர் சுரங்கத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவது போன்ற ஒரு காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதில் உள்ள நபரின் விவரமும் தெரியவில்லை.
மே 25ஆம் தேதி காஸாவில் போர் நிறுத்துவதற்கான பேச்சு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபு உபைதாவின் அறிவிப்பு வெளியானது.
இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பின் தலைவர், அமெரிக்க சிஐஏ தலைவரையும் கத்தார் பிரதமரையும் சந்தித்த பிறகு அடுத்த வாரம் மீண்டும் பேச்சு தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது குறித்து நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சண்டை நிறுத்தத்திற்கு சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து, கத்தார் ஆகியவை அமெரிக்காவின் ஈடுபாட்டுடன் முன்வைக்கும் புதிய உத்தேச திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சு நடைபெறும் என்று தமது பெயர், நாடு பற்றிய விவரங்களை தெரிவிக்க மறுத்த வட்டாரம் குறிப்பிட்டது.
மே 28 கெய்ரோவில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று இஸ்ரேலிய ஊடகங்களின் தகவல்களை ஹமாஸ் அதிகாரி ஒருவர் பின்னர் மறுத்திருந்தார். தேதி எதுவும் குறிக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸிடம் அந்தப் பேச்சாளர் சொன்னார்.