அரசதந்திர, பாதுகாப்புக் கலந்துரையாடல்களைத் தொடங்க தென்கொரியா, சீனா இணக்கம்

அரசதந்திர, பாதுகாப்புக் கலந்துரையாடல்களைத் தொடங்க தென்கொரியா, சீனா இணக்கம்

2 mins read
06857374-a60b-42a3-a517-b56bc5f97883
ஜப்பான், தென்கொரியாவுடனான முத்தரப்பு உச்சநிலைச் சந்திப்பில் கலந்துகொள்ள சீனப் பிரதமர் லீ சியாங், சோல் சென்றுள்ளார். - படம்: இபிஏ

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலும் சீனப் பிரதமர் லி சியாங்கும் அரசதந்திரம், பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பான கலந்துரையாடலைத் தொடங்க மே 26ஆம் தேதி இணக்கம் கண்டுள்ளனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதிபர் யூனும் பிரதமர் லியும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனான முத்தரப்பு உச்சநிலைச் சந்திப்புக்கு முன்னதாக நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில் கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான பொதுவான நலன்களை மேம்படுத்துவது மட்டுமன்றி, வட்டார, உலகளாவிய விவகாரங்களிலும் இணைந்து பணியாற்றி பொதுவான சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்று அதிபர் யூன் சீனப் பிரதமரிடம் கூறினார்.

உக்ரேனியப் போர், இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதல், உலகளாவிய பொருளியல் நிச்சயமற்றதன்மை போன்றவற்றை அதிபர் யூன் சுட்டினார்.

கடந்த 30 ஆண்டுகளில் இரு நாடுகளும் பல்வேறு சிரமங்களைக் கடந்து, ஒன்றுக்கொன்று வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த அவர் நம்பிக்கை தெரிவித்ததாக தென்கொரிய அதிபர் அலுவலகம் கூறியது.

பொருளியல், வர்த்தக விவகாரங்களை அரசியல் அல்லது பாதுகாப்பு விவகாரமாக மாற்றும் போக்கிற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தென்கொரிய அதிபரிடம் சீனப் பிரதமர் லி கூறினார்.

நிலையான விநியோகச் சங்கிலியைத் தக்கவைத்துக்கொள்ளவும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று அவர் கூறியதாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

கிட்டத்தட்ட நாலாண்டுகளில் முதல்முறையாக மே 27ஆம் தேதி, தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு உச்சநிலைச் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்