வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மே 25ல் லிபர்ட்டேரியன் தேசிய மாநாடு நடைபெற்றது.
அதில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார்.
அவர் மேடையில் ஏறி பேசியபோது அங்கு கூடியிருந்தோர் அவருக்கு எதிராக அதிருப்திக் குரல் எழுப்பினர்.
லிபர்ட்டேரிய அரசியல் சித்தாந்தம் வழி நடப்பவர் தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அரசாங்கத்திற்கு இருக்கும் அதிகாரம் ஓர் எல்லைக்கு மேல் போகக்கூடாது என்று அவர்கள் நம்புகின்றனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவி வகித்தார்.
கொவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்க அவர் அவசரப்பட்டதாகவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குப் பல கட்டுப்பாடுகளை அவர் விதித்ததாகவும் லிபர்ட்டேரியர்கள் அவரைக் குறைகூறி வருகின்றனர்.
இந்நிலையில், கருத்தரங்கில் டிரம்ப் பேசியபோது பலர் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து கரவொலி எழுப்பினர்.

