இஸ்‌ரேலியத் தாக்குதலில் குறைந்தது 35 பேர் பலி; பாலஸ்தீனர்கள் குமுறல்

1 mins read
2faac634-2a52-4cb9-b53d-4486c2f77ebb
இஸ்‌ரேலியத் தாக்குதல் காரணமாக ராஃபாவில் உள்ள பல கட்டடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: காஸாவின் தென் பகுதியில் உள்ள ராஃபா நகர் மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 35 பேர் மாண்டதாக பாலஸ்தீன சுகாதார, சிவில் அவசரநிலைச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மகளிர் மற்றும் சிறார் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

மே 26ல் ஹமாஸ் அமைப்பு, இஸ்‌ரேலியத் தலைநகர் டெல் அவிவ்வை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியதை அடுத்து, ராஃபா மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

காஸா மீது இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்தாலும் ஹமாஸ் அமைப்பு வலுவுடன் இருப்பதைக் காட்ட டெல் அவிவ் நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராஃபாவில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்த இடத்தைத் தாக்கியதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இத்தாக்குதல் காரணமாகப் பொதுமக்கள் பலர் மாண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்துவதாக இஸ்‌ரேலியத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்