பெய்ஜிங்: பகுதி மின்கடத்தித் துறையை ஊக்குவிக்கும் விதமாக, சீனா மூன்றாவது முறையாக அரசாங்க ஆதரவு பெற்ற முதலீட்டு நிதியை ஒதுக்கியுள்ளது.
344 பில்லியன் யுவான் (S$65.4 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
பகுதி மின்கடத்தித் துறையில் சீனா தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்று அதிபர் ஸி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
பெய்ஜிங் அதன் ராணுவத் திறன்களை அதிகரிக்க மேம்பட்ட கணினிச் சில்லுகளைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா தொடர்ந்து ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது.
எனவே சீனா, பகுதி மின்கடத்தித் துறையில் தற்சார்பு அடைவதற்கான தேவை மேலும் அதிகரித்திருப்பதாகக் கருதுகிறது.
அதற்கு உதவும் வகையில், மே 24ஆம் தேதி, அதிகாரபூர்வமாக இந்த மூன்றாவது முதலீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கான பெய்ஜிங் நகராட்சி நிர்வாகத்தின்கீழ் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு நிதி, ‘பெரிய நிதி’ என்று அழைக்கப்படுகிறது.
இதில் சீன நிதியமைச்சு ஆக அதிகமாக 17 விழுக்காட்டுப் பங்குகளைப் பெற்றிருக்கும். அவற்றின் மொத்த மதிப்பு 60 பில்லியன் யுவான் (S$11.4 பில்லியன்) என்று சீன நிறுவனத் தகவல் தரவு நிறுவனமான டியன்யன்சா கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த நிலையில், சீன வளர்ச்சி வங்கி 10.5 விழுக்காட்டுப் பங்குகளைப் பெற்றிருக்கும்.
மேலும் 17 நிறுவனங்கள் முதலீட்டாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சீனாவின் முக்கிய வங்கிகள் ஐந்தும் அடங்கும். அந்த வங்கிகள் தலா ஏறக்குறைய 6 விழுக்காட்டுத் தொகையை முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது.
‘பெரிய நிதி’யின் முதற்கட்டமாக, 2014ஆம் ஆண்டு 138.7 பில்லியன் யுவான் (S$25.8 பில்லியன்)ஒதுக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்டமாக, 2019ஆம் ஆண்டு 204 பில்லியன் யுவான் ஒதுக்கப்பட்டது.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட நிதி, கணினிச் சில்லு உற்பத்தியில் கவனம் செலுத்தும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தகவல் வெளியிட்டிருந்தது.

