பேங்காக்: தாய்லாந்தின் மன்னராட்சியை அவமதித்த புகாரின்பேரில் அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ர மீது குற்றம் சாட்ட உள்ளது. புதன்கிழமை (மே 29) இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திரு தக்சினின் ஆதரவாளர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் நிலையில் அவரது அரசியல் பயணத்தில் இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரான திரு தக்சின், 74, கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊடகத்தில் பேட்டியளித்தபோது மன்னராட்சியை அவமதித்துப் பேசியதாக அரச ராணுவம் புகார் அளித்து இருந்தது.
அந்த ராணுவம்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரு தக்சினின் சகோதரி யிங்லக் ஷினவத்ரவின் அரசாங்கத்தைக் கவிழ்த்தது.
கணினிக் குற்றச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட வேறு சில புகார்களும் திரு தக்சினுக்கு எதிராக அளிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தக்சினுக்கு எதிரான எல்லாப் புகார்களின் மீதும் குற்றம் சாட்டுவது என்று தலைமைச் சட்ட அதிகாரி முடிவு எடுத்துள்ளதாக பிரயுத் பெஜ்ரகுனா என்னும் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள திரு தக்சின் ஜூன் 18ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் தமக்கு எதிரான எல்லாப் புகார்களையும் திரு தக்சின் மறுத்து உள்ளார். மேலும், மன்னர் குடும்பத்துக்கு தாம் விசுவாசமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மன்னரின் குடும்பத்தை அவமதிக்கும் குற்றத்துக்கு அதிகபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தின்கீழ் அண்மைய ஆண்டுகளாக 270க்கும் அதிகமானோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது.
அவர்களிலேயே ஆகப்பெரிய முக்கிய புள்ளி திரு தக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணை புதன்கிழமை (மே 29) நடைபெற்றபோது திரு தக்சின் நீதிமன்றம் செல்லவில்லை. அவருக்கு கொவிட்-19 நோய் தொற்றி இருப்பதாக அவரது வழக்கறிஞர் வின்யட் சார்ட்மோன்ட்ரி கூறினார்.

