பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் 11 வயது சிறுவனை அவரது ஆசிரியர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு கடுமையான வெயிலில் நிற்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அச்சிறுவனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நேரமாக கடுமையான வெயிலில் நின்ற காரணத்தினால் அச்சிறுவனுக்கு நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அம்பாங் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அவரை இனி உடற்குறையுள்ளவராக வகைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த மருத்துவமனை கடிதம் தந்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் 35 வயது திருவாட்டி ஏ.டி. மோகன செல்வி கூறினார்.
அச்சிறுவன் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 12.50 மணி வரை வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாக மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தமது மகனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக மே 29ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி மோகன செல்வி கூறினார்.
முன்பு தமது சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடிய தமது மகன், தற்போது மற்றவர்களிடமிருந்து ஒளிந்து தமக்குத் தாமே பேசிக்கொள்வதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“உடல்நிலை பிரச்சினை காரணமாக எனது மகனை இனி வழக்கமான பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று மருத்துவமனை தெரிவித்துவிட்டது. சிறப்புத் தேவைகள் கொண்ட சிறாருக்கான பள்ளிக்கு அவரை அனுப்ப வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று தமது மனக் குமுறலை வெளிப்படுத்தினார் திருவாட்டி மோகன செல்வி.
செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி மோகன செல்வியுடன் அவரது கணவரான 40 வயது திரு பி. சுரேஷ், அவர்களது வழக்கறிஞர் திரு தினேஷ், மலேசியா-சிங்கப்பூர் ஊழியர் பணிக்குழுத் தலைவர் எஸ். தயாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக, சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த அனைவருக்கும் எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று வழக்கறிஞர் திரு தினேஷ் கூறினார்.
“இந்த விவகாரம் சிறுவனின் குடும்பத்துக்குக் கடும் மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறுவனின் தாயார் திருவாட்டி மோகன செல்வி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மூன்று மாதக் கர்ப்பிணி,” என்றார் அவர்.