எங்கே சென்றார் தக்சின்: வீட்டைச் சுற்றி கண்காணிப்பு

2 mins read
275c694f-1fd3-467c-abfd-f7cab2c6c328
புதன்கிழமை திரு தக்சின் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்த டொயோட்டா ஃபார்சுனர் கார். - படம்: த நேஷன்

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் புதன்கிழமை (மே 29) பேங்காக்கில் உள்ள தமது இல்லத்திலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் வேனில் வெளியேறியதை ஊடகங்கள் காண முடிந்தது.

சான் சோங் லார் என்னும் பெயர் கொண்ட அவரது பங்களாவில் இருந்து நண்பகல் வாக்கில் அந்த வேன் கிளம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் காலையில் தம் மீதான குற்றச்சாட்டை எதிர்நோக்க திரு தக்சின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் செல்ல தவறியதற்குப் பிறகு அச்சம்பவம் நிகழ்ந்தது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

திரு தக்சின் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அடுத்த வாரம் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டி உள்ளது என்றும் அவரது வழக்கறிஞர் வின்யட் சார்ட்மோன்ட்ரீ தெரிவித்தார்.

அதற்கான மருத்துவச் சான்றிதழையும் அவர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணை ஜூன் 18ஆம் தேதிக்குத் தள்ளிப் போடப்பட்டது.

தாய்லாந்தின் மன்னராட்சியை அவமதித்த குற்றச்சாட்டையும் கணினிக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டையும் திரு தக்சின் எதிர்நோக்குகிறார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய தகவலை பதிவேற்றிய குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தென்கொரிய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் மன்னராட்சியை அவர் விமர்சித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

காலை 8.30 மணியளவில் அவரது வீட்டுக்கு வெளியே சாதாரண உடையில் காவல்துறை அதிகாரிகள் நின்று நிலைமையைக் கண்காணித்ததைக் காணமுடிந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்