ஜகார்த்தா: அரசாங்கத்தின் 27,000 கைப்பேசிச் செயலிகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க இந்தோனீசியா திட்டம் வகுத்து உள்ளது.
அந்தத் திட்டம் இந்தோனீசிய குடிமக்களுக்கு வசதி அளிக்கும் என்று அதனை வரவேற்றபோதிலும் தரவுகளின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனீசியாவின் மின்னிலக்கச் சேவைகளைப் பாதிக்கக்கூடிய பெரிய அளவிலான தரவுக் கசிவுகள் ஏற்படுவதைக் குறைக்க இணையப் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.
‘ஐஎன்ஏ டிஜிட்டல்’ என்னும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே தளத் திட்டத்தை மே 27ஆம் தேதி தொடங்கி வைத்த அதிபர் ஜோக்கோ விடோடோ, “அரசாங்கத்தின் மின்னிலக்கச் சேவைகளை தங்குதடையின்றி பெற ஒரே ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்தோனீசிய அரசாங்கத்தின் நீண்டநாள் திட்டம்,” என்றார்.
அதிபர் மாளிகையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். தனது சேவைகளை மக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள அரசாங்கம் எவ்வாறு நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அப்போது அதிபர் வலியுறுத்தினார்.
அமைச்சுகள், அரசாங்க அமைப்புகள், வட்டார நிர்வாக அலுவலகங்கள் போன்றவற்றுக்காக ஏறக்குறைய 27,000 செயலிகள் செயல்பட்டால் சேவைகளை எப்படி எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
‘ஐஎன்ஏ டிஜிட்டல்’ என்பது சிங்கப்பூரின் சிங்பாஸ் செயலியைப் போன்று செயல்படும் என்று கூறப்பட்டது. பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் செயலிகளின் விவரங்களை ஒரே தளத்தில் பெற இந்தோனீசியர்களுக்கு வசதி வழங்குவது ‘ஐஎன்ஏ டிஜிட்டல்’ திட்டத்தின் நோக்கம்.