ஃபுஜி-காவாகுஜிக்கோ, யமனாஷி: ஜப்பானின் ஃபுஜி-காவாகுஜிக்கோ அரசாங்கம், ஃபுஜி மலையைப் படமெடுக்கும் சுற்றுப்பயணிகள் கூட்டத்தைத் தடுக்க லாசன் கடைக்கு அருகில் நிறுவப்பட்ட திரையில் “தொடாதே” என்ற அறிவிப்பை வைத்துள்ளது.
திரையில் ஏற்படுத்தப்பட்ட பல ஓட்டைகளையும் நகர அரசு சரி செய்துள்ளது.
யமனாஷி நகரத்தில் உள்ள ஃபுஜி மலையைத் தூரத்திலிருந்து படம்பிடிக்கும் சுற்றுப் பயணிகள் விதிமுறைகளை மீறி தொல்லை விளைவிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தோர் புகார் அளித்ததையடுத்து, அங்கிருந்து ஃபுஜி மலையைப் படமெடுக்க முடியாதபடி 2.5 மீட்டர் உயரத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் தடுப்பு போடப்பட்டது.
தற்போது வேறு ஒரு பொருளால் செய்யப்பட்ட திரையை நிறுவுவது குறித்து நகரம் பரிசீலித்து வருகிறது.
மேலும், சாலை, நடைபாதைக்கு இடையே அமைக்கப்பட்ட திரைக்கு ஆதாரமான உலோகக் கம்பங்களில் ஒன்று, சற்று வளைந்த நிலையில் காணப்பட்டது. கம்பங்களும் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 2.5 மீட்டர் உயரமானது. பெரிய வாகனமொன்றின் பக்க கண்ணாடி மோதி, கம்பம் வளைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.