ஜெருசலம்: ஹமாசின் ராணுவ, ஆளும் ஆற்றல்கள் அழிக்கப்படும்வரை காஸாவில் நிரந்தரச் சண்டைநிறுத்தம் இருக்காது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருக்கிறார்.
ஹமாஸிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக இஸ்ரேல் புதிய சண்டைநிறுத்தத் திட்டத்தை முன்வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதைத் தொடர்ந்து, அவரது கருத்து வந்துள்ளது.
முன்னதாக, சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே சிறந்த வழி என்றும் திரு பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை என்று திரு நெட்டன்யாகு கூறியிருக்கிறார்.
நிரந்தரச் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வருவதற்குமுன், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தும் என்றார் அவர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் நெருக்கடியில் உள்ள திரு பைடனுக்கு எட்டாவது மாதத்தை எட்டியுள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எகிப்து, கத்தார் மற்றும் இதர தரப்புகள் நடுவர்களாகச் செயல்பட்டு சண்டை நிறுத்தத்துக்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வருவதாக இல்லை. பேச்சுவார்த்தைக்கு அடிக்கடி முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது. இதற்கு இருதரப்பும் மற்றொன்றைக் குற்றம்சாட்டி வருகின்றன.
இஸ்ரேல் பல முறை தாக்குதல்களை நடத்தி ராஃபாவுக்குள் புகுந்துள்ள வேளையில் புதிய உத்தேச திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு நெட்டன்யாகு போரைக் கையாளும்விதம் குறித்து உள்ளூர் மக்களே குறைகூறுகின்றனர். பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாததால் உள்ளூரில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் உலக நாடுகளும் நெட்டன்யாகுவுக்கு நெருக்குதலைக் கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே பைடன் அறிவித்த புதிய உத்தேசத் திட்டத்துக்கு ஹமாஸ் அறிக்கை வாயிலாக பதிலளித்தது.
நிரந்தரமான சண்டை நிறுத்தம், இஸ்ரேலியப் படைகள் மீட்பு, காஸா மறுநிர்மாணம் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேசத் திட்டம் இருந்தால் ஆக்ககரமான முறையில் அதில் பங்கேற்பதாக ஹமாஸ் அறிக்கையில் கூறியது.
இரு தரப்பிலும் கைதிகளின் பரிமாற்றம் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.