நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், குற்றவியல் வழக்கில் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்வரை அவர் காத்திருக்க வேண்டும்.
இந்த விசாரணை தம்மை அதிபர் தேர்தலில் தோற்கச் செய்யும் முயற்சி என்று மீண்டும் குறைகூறிய திரு டிரம்ப் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட விசாரணைகளிலிருந்து அமெரிக்கர் யாரும் பாதுகாக்கப்படவில்லை என்றார்.
ஜூலை 11ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்ட பிறகு 30 நாள்களுக்குள் அவர் மேல்முறையீடு மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வேளையில், அமெரிக்கர்கள் சிலர் வீடுகளுக்கு வெளியே அமெரிக்கக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டுள்ளதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
திரு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து இத்தகைய படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
வேதனையை வெளிப்படுத்தவோ போராட்டத்தைக் குறிக்கும் விதமாகவோ அமெரிக்கர்கள் இவ்வாறு தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடும் பழக்கம் கடந்த 200 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் அவரது ஆதரவாளர்களிடமிருந்து 53 மில்லியன் அமெரிக்க டாலர் (S$71 மில்லியன்) நிதி திரட்டப்பட்டதாக அவரது தேர்தல் பிரசாரக் குழு மே 31ஆம் தேதி மாலை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் பிரசாரக் குழு அமெரிக்கத் தேர்தல் ஆணையத்திடம் தகவல்களைப் பதிவுசெய்யும்போதுதான் இந்தத் தொகையை உறுதிசெய்ய முடியும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மே 31ஆம் தேதி இணையம் வாயிலாக நன்கொடை அளித்தவர்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் புதியவர்கள் என்று கூறப்பட்டது.

