மணிலா: சுவிட்சர்லாந்தில் இம்மாதம் நடைபெற இருக்கும் அமைதிக்கான உச்சநிலைக் கூட்டத்தில் பிலிப்பீன்ஸ் பங்கேற்க இருப்பதாக உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
மணிலாவுக்கு திடீர் வருகை மேற்கொண்ட திரு ஸெலென்ஸ்கி இத்தகவலை திங்கட்கிழமை (ஜூன் 3) தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார்.
எந்த ஒரு பயணத் திட்டமும் இன்றி சிங்கப்பூர் வந்த அவர், ஆசிய-பசிபிக் தலைவர்களைச் சந்தித்து அமைதிக்கான உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
ஜூன் 15, 16 தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருக்கும் அந்தக் கூட்டத்தில், போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, மணிலாவில் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோசுடன் நடத்திய சந்திப்பு குறித்து எக்ஸ் பதிவில் திரு ஸெலென்ஸ்கி தகவல் வெளியிட்டார்.
“உலக அமைதி உச்சநிலைக் கூட்டம் தொடங்கப்படுவது குறித்தும் அதில் பங்கேற்பதில் தென்கிழக்கு ஆசியாவுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் இருவரும் ஆலோசித்தோம்.
“பிலிப்பீன்ஸ் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறது என்ற நல்ல தகவலை தெரிவிக்கிறேன்,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய நிலையில், அந்தக் கூட்டத்தில் திரு மார்கோஸ் பங்கேற்பாரா அல்லது உயர்நிலை அதிகாரி பங்கேற்பாரா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.

