பெய்ஜிங்: கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை வேண்டும் என்று 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து ஜூன் 4ஆம் தேதி வரை தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அந்நாட்டு ராணுவம் இரும்புக்கரம் கொண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் பலர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டோர் எண்ணிக்கையை சீன அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மனிதாபிமான அமைப்புகளும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஜூன் 4ஆம் தேதியுடன் 35 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், இதுதொடர்பாக சீனாவிலும் ஹாங்காங்கிலும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தியானன்மென் சதுக்கத்துக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.
தியானன்மென் ஈஸ்ட் ரயில் நிலையம் ஜூன் 2ஆம் தேதியிலிருந்து ஜூன் 5ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தியானன்மென் சதுக்கத்தில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஹாங்காங்கின் விக்டோரியா பார்க் பகுதியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
ஆனால் அங்கு மக்கள் ஒன்றுகூடாமல் இருக்க பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.


