ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கையின் ஓர் அம்சமாக அந்நாட்டு அதிபர் பிரபோவோ நீர் முகவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தோனீசியாவில் நீண்டநாட்களாக நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் முகவையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்துவதை முன்னுரிமையாக இந்தோனீசிய அதிபர் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக நீர்க்குழாய்கள், கிணறுகள் அமைப்பது போன்றவை திட்டத்தில் அடங்கும் என்று திட்டம் குறித்து விவரமறிந்தோர் தெரிவிக்கின்றனர்.
திரு பிரபோவோவின் இந்தத் திட்டம் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், நீர் முகவையை எவ்வாறு அமைப்பது, அதற்கான நிதி ஆதாரம், அதை வழிநடத்துவோர் போன்றவை தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திரு பிரபோவோ தனது ஆட்சியில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணத்தில் இருக்கும் நிலையில் நீர் முகவை அமைக்கும் யோசனை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அமைச்சுகளின் செயல்திறன் பாதிக்கப்படும் என்றும் திட்டங்கள் அமலாவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தோனீசியாவில் உள்ள 278 மில்லியன் மக்களில் 70 விழுக்காட்டினருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனீசியாவின் வர்த்தக நகரமான ஜகார்த்தாவில் மூன்றில் ஒருவருக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதில்லை. மாறாக, தங்கள் நீர்த் தேவைக்காக அவர்கள் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத கிணறுகளை நம்பியிருக்கும் நிலை உள்ளது.

