ஜெனிவா: காஸா குடிமக்களில் சிலர் விலங்குகளுக்கான உணவை சாப்பிடுவதாகவும் கழிவு நீரை குடிப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் வட்டாரத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்கு அதிகமான உணவுப் பொருள்களை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் சுகாதார பராமரிப்பு மீதான தாக்கத்தை அதிகப்படுத்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் கிழக்கு மத்திய தரைக்கடல் வட்டார இயக்குநரான திருவாட்டி ஹனான் பால்கி எச்சரித்து உள்ளார்.
குறிப்பாக குழந்தைகளிடம் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“காஸாவில் உள்ளோரில் சிலர் தற்போது விலங்குகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறார்கள், புற்களைப் பறித்து சாப்பிடுகிறார்கள், இன்னும் மோசமாக, குடிநீர் கிடைக்காததால் கழிவுநீரை அவர்கள் குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
“ராஃபாவுக்கு வெளியே உணவு இல்லாததால் குழந்தைகளால் சாப்பிட இயலாத நிலை உள்ளது,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய காஸா போரில் 1,194 உயிர்கள் பலியாகிவிட்டதாக இஸ்ரேலும் 36,550 பேர் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் வழிநடத்தும் காஸா சுகாதார அமைச்சும் தெரிவித்து உள்ளன.
பாதுகாப்பான உணவு இல்லாததால் காஸாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் அதாவது, 1.1 மில்லியன் பேர் பேரழிவை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
காஸா முழுவதும் உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய இயலாத வகையில் தொடர்ந்து இடையூறு அளிக்கப்பட்டு வருவதாக ஐநா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4ஆம் தேதி) தெரிவித்தது.

