காஸாவில் உள்ள பள்ளி மீது இஸ்‌ரேல் தாக்குதல்

காஸாவில் உள்ள பள்ளி மீது இஸ்‌ரேல் தாக்குதல்

2 mins read
0cb19f75-dcbb-464a-9f65-91061b85ab62
இஸ்‌ரேலியத் தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன ஆடவரைத் தூக்கிச் செல்லும் மருத்துவ உதவியாளர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: காஸாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

அப்பள்ளி வளாகத்தில் ஹமாஸ் போராளிகள் இருந்ததாகவும் தாக்குதலில் அவர்கள் மாண்டுவிட்டதாகவும் இஸ்‌ரேல் கூறியது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்‌ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பலரைக் கடத்திச் சென்ற போராளிகளில் இவர்களும் அடங்குவர் என்று இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இதை காஸா ஊடகம் மறுத்தது.

அந்தப் பள்ளியில் அகதிகள் இருந்ததாக அது கூறியது.

இஸ்‌ரேலியத் தாக்குதலில் குறைந்தது 37 பேர் மாண்டதாக காஸா ஊடகம் தெரிவித்தது.

அந்தப் பள்ளி வளாகத்தில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்‌ரேல் கூறுவது உண்மையன்று என்று ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஊடகத்தின் இயக்குநர் இஸ்மாயில் அல் தவாப்டா கூறினார்.

பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி அகதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக அவர் குற்றஞ்‌சாட்டினார்.

தாக்குதலில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்தது.

காஸா தரப்புடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தங்கள் முடிவாகும் வரை தங்களது தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் அமைதி பேச்சுக்கு தடைக்கல்லாக இருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

போரை இஸ்ரேல் நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் தரப்பினர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக அழிக்காமல் ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் உள்ளதால் அமைதி பேச்சுவார்த்தையில் சிக்கல் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஹமாஸ்காஸா