கெய்ரோ: காஸாவில் உள்ள பள்ளியில் கிட்டத்தட்ட 30 ஹமாஸ் போராளிகள் மறைந்திருப்பதாகக் கூறிய இஸ்ரேல் ஜூன் 6ஆம் தேதி அப்பள்ளி மீது தாக்குதல் நடத்தியது.
அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) நடத்தும் அந்தப் பள்ளியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்திருந்ததாகக் கூறப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து, உயிரிழந்தோரையும் காயமடைந்தோரையும் பாலஸ்தீனர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தம் தொடர்பில் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
ஹமாஸ் தரப்பு பிணைபிடித்தவர்களையும் இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களையும் விடுவிக்க சண்டை நிறுத்தம் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்-அக்ஸா மார்டைர்ஸ் மருத்துவமனையில் முகத்தில் கடுமையாகக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சிறுவன், இஸ்ரேலின் அந்தத் தாக்குதலில் தன் தந்தை உயிரிழந்ததாகக் கூறினான்.
ராய்ட்டர்சுக்குக் கிடைத்த காணொளியில், “நாங்கள் என்ன தவறு செய்தோம்? அந்தப் பள்ளியில் ஆயுதமேந்திய யாரும் தங்கியிருக்கவில்லை. குழந்தைகள்தான் அங்கு உள்ளோம். நாங்கள் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். ஏன் எங்கள் மீது குண்டு வீசினார்கள்?” என்று கேள்வி எழுப்பினான்.
தொடர்புடைய செய்திகள்
துணிகள், கம்பளிகளில் சுற்றப்பட்டிருந்த மாண்டோரின் சடலங்களை அக்காணொளி காட்டுகிறது.
இந்நிலையில், சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுமாறு இஸ்ரேலையும் ஹமாஸ் தரப்பையும் வலியுறுத்தி அமெரிக்காவும் இதர நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
சண்டை நிறுத்தத்திற்கான ஆக அண்மைப் பரிந்துரைக்கு ஹமாஸ் தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை என்று கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஜித் அல்-அன்சாரி கூறினார்.
பதிலளிப்பதற்கு அதில் புதிதாக ஒன்றுமில்லை என்கிறது ஹமாஸ்.
மேலும், காஸாவில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐக்கிய நாட்டு நிறுவனப் பள்ளி ஹமாசின் தளபத்திய இடமாகச் செயல்பட்டது என்று இஸ்ரேல் கூறுவதை ஹமாஸ் தரப்பு மறுத்துள்ளது.

