வாஷிங்டன்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஜூலை 24ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருப்பதாக குடியரசுக் கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 6) தெரிவித்தனர்.
“ஜூலை 24ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நடைபெறும் போர் தொடர்பான சில உண்மைகளைத் தெரிவிக்க இருக்கிறேன்,” என்று திரு நெட்டன்யாகு கூறியதாக அந்தத் தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தில் திரு நெட்டன்யாகு உரையாற்றுவார் என்று மன்ற நாயகர் மைக் ஜான்சனும் செனட்டின் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கன்னுல்லும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.
அதேபோல திரு நெட்டன்யாகுவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
“அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்து உள்ளது. எங்களை அழிக்க நினைப்போருக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போர் தொடர்பான உண்மைகளை அமெரிக்க மக்களின் பிரதிநிதிகளுக்கும் உலகம் முழுவதுக்கும் அப்போது தெரிவிப்பேன்,” என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதிபர் ஜோ பைடனுக்கும் திரு நெட்டன்யாகுவுக்கும் இடையில் கருத்து மோதல் நிகழ்ந்துவரும் வேளையில் அவரது அமெரிக்க வருகை குறித்த செய்தி வெளியாகி உள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரித்தபோதிலும் அது போர் நடத்தும் விதத்தை எதிர்த்து வருகிறது.
அதன் காரணமாக இஸ்ரேலுக்கு அனுப்ப இருந்த பீரங்கிக் குண்டுகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து உள்ளது.
அதனால், அடுத்த மாதம் அமெரிக்கா வரும்போது திரு பைடனை திரு நெட்டன்யாகு சந்திப்பாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

