தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் பல்வேறு குற்றங்கள் புரிந்துள்ளன: ஐநா

2 mins read
a8f73e9d-e45f-4bcc-99f0-dbf9af52b911
காஸாவில் எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் மே மாதம் குறைந்தது 7,797 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: உலக அளவில் சிறுவர்களுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு குற்றங்கள் புரிந்தோர் பட்டியலில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் சேர்த்துள்ளார்.

இதைத் தெரிவித்த ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டான் அந்த முடிவு வெட்கக்கேடானது என வர்ணித்தார்.

இதன் தொடர்பில் ஹமாஸ், பாலஸ்தீன ஜிகாத் அமைப்பு ஆகியவையும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத அரசதந்திர வட்டாரம் கூறியது.

ஐநா பொதுச் செயலாளரின் இந்த முடிவு தமக்கு ஜூன் 7ஆம் தேதி தெரிவிக்கப்பட்டதாக திரு எர்டான் தெரிவித்தார். ஐநா பாதுகாப்பு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையில் சிறுவர்கள் பற்றி குறிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையை ஐநா பொதுச் செயலாளர் திரு குட்டரஸ் ஜூன் 14ஆம் தேதி ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக திரு எர்டான் விளக்கினார்.

அந்த அறிக்கையில் கொலை, உடல் ஊனம் ஏற்படுத்துவது, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல், ஆள்சேர்த்து சிறுவர்களை பயன்படுத்துவது, உதவி பெறுவதை தடுப்பது, பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் எந்தெந்த குற்றங்களை ஹமாஸ் , இஸ்ரேல், பாலஸ்தீன ஜிகாத் அமைப்பு ஆகியவை புரிந்துள்ளன என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றிக் கருத்துரைத்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ், ஐநாவின் இந்த முடிவு தமது நாட்டுக்கும் ஐநாவுக்கும் இடையிலான உறவு முறையில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஐநாவுக்கும் இடையே பல காலமாக ஏட்டிக்கு போட்டியான உறவு முறை இருந்து வந்துள்ளது. இந்த உறவு முறையை காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே நடைபெறும் போர் மோசமாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

காஸாவில் எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் மே மாதம் குறைந்தது 7,797 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா கூறுகிறது. இதை ஐநா காஸாவின் சுகாதார அமைச்சு அடையாளம் காணப்பட்ட உடல்களைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்றும் இதை ஐநா ஏற்றுள்ளது என்றும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன. T

இந்நிலையில், காஸா அரசு ஊடகம் மொத்தம் கிட்டத்தட்ட 15,500 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலின் சிறார் தேசிய மன்றம் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் 38 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அத்துடன், ஹமாஸ் நடத்திய அந்தத் தாக்குதலில் பிணையாக பிடித்துச் செல்லப்பட்ட கிட்டத்தட்ட 250 பேரில் 42 பேர் சிறுவர்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் தவிர அனைத்து சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்