ஜெருசலம்: இஸ்ரேலிய அமைச்சர் பென்னி கான்ட்ஸ், பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் போர்க்கால அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 9) அறிவித்தார்.
திரு கான்ட்ஸ், இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தில் இருந்த ஒரே நடுநிலைவாதியாவார்.
அவரின் பதவி விலகல் தற்போதைக்கு அரசாங்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
திரு கான்ட்ஸ் பதவி விலகுவதால் திரு நெட்டன்யாகு, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவோரை நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. காஸா போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்ற சூழல் நுலவுவதோடு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான சண்டை மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலைமை இப்படியிருக்கும் வேளையில் திரு கான்ட்ஸ் பதவி விலகுகிறார்.
போர் நிறைவடைந்த பிறகு காஸாவுக்கான திட்டத்துக்கு திரு நெட்டன்யாகு இம்மாதம் எட்டாம் தேதிக்குள் ஒப்புதல் வழங்காவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக திரு கான்ட்ஸ் கடந்த மே மாதம் கூறியிருந்தார். அந்தக் கெடுவை திரு நெட்டன்யாகு நிராகரித்தார்.

