ஜோகூர் கடல்நீரில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர் இழுவைப் படகை மலேசிய கடல்துறை அமலாக்க முகவை தடுத்து வைத்து உள்ளது.
ஜோகூரின் புலாவ் ஹரிமாவுக்கு மேற்கே உத்தேசமாக 3.5 கடல் மைல் தூரத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகும் அதன் துணைப் படகும் பிடிபட்டதாக முகவையின் இயக்குநர் சுஹைஸான் சாடின் கூறினார்.
இரு படகுகளும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) முகவையின் சுற்றுக் காவல் பிரிவு மேற்கொண்ட வேட்டையில் சிக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
“சோதனை நடத்தப்பட்டதில், இரு படகுகளும் எல்லை தாண்டி வந்ததை மலேசியாவிடம் தெரிவிக்கத் தவறியதன் மூலம் குற்றம் இழைக்கப்பட்ட சந்தேகம் எழுந்தது.
“அத்துடன் மலேசியாவின் கடல்துறை இயக்குநரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து உள்ளது,” என்றார் அவர்.
இரு படகுகளிலும் இருந்த மாலுமி உள்ளிட்ட எழுவரும் இந்தோனீசியர்கள் என்றும் அவர்கள் 25க்கும் 54க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் திரு சுஹைஸான் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
மாலுமியும் தலைமைப் பொறியாளரும் மெர்சிங் படகுத்துறைக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முகவையின் விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

