கோலாலம்பூர்: கணிதம், அறிவியல் பாடங்களை எந்த மொழியில் கற்பிப்பது என்பது குறித்த சர்ச்சை மலேசியாவில் மீண்டும் கிளம்பி உள்ளது.
அரசாங்க இருமொழிக் கொள்கைத் திட்டத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தபட்சம் ஒரு வகுப்பிலாவது கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தேசிய மொழியில் அல்லது தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது அந்தத் திருத்தம்.
ஆனால், சில பள்ளிகள் அதற்கு எதிராக, தங்களது மாணவர்கள் இந்த இரு முக்கிய பாடங்களை உலக மொழியில் கற்றுத் தேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன.
பிரதமர் அன்வாரின் அரசாங்கம் மலாய் மொழியில் இந்தப் பாடங்களைக் கற்க மாணவர்களை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
அது குறித்து புதன்கிழமை (ஜூன் 12) கருத்துத் தெரிவித்த கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு என்னும் அமைப்பு, “முன்னேற்றம், செழிப்பு, உலகளாவிய கண்ணோட்டம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிலிருந்து மலாய்க் குழந்தைகளைத் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் தொடர்ந்து ஒடுக்கும் மலாய் தேசியவாதிகளின் நடவடிக்கை இது,” என்று சாடியுள்ளது.
குறிப்பாக, மலேசியாவின் வடக்கு மாநிலமான பினாங்கில் அந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது.
மலேசியாவின் சிலிக்கன் வேலி என்று வர்ணிக்கப்படும் அந்த மாநிலத்தில் உயர் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த பன்னாட்டு மக்கள் அதிகம் உள்ளனர். வர்த்தகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் கைகொடுக்க ஆங்கில மொழியை அவர்கள் முக்கிய மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையே, இரு மொழிப் பாடத் திட்டத்தில் அசல் நோக்கம் தக்க வைக்கப்பட வேண்டுமென பினாங்கிலுள்ள 11 தேசிய மற்றும் சீன இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி வாரியங்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் ஜூன் 5ஆம் தேதியன்று புதிய மாற்றத்துக்கு எதிராகக் கிளம்பின.
தொடர்புடைய செய்திகள்
மலாய் மொழியிலோ அல்லது மாணவர்களின் தாய் மொழியிலோ கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழாததால் அந்தப் பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்படும் என்று அவை தெரிவித்தன.