மில்லியன் கணக்கில் ரிங்கிட் பறிமுதல்; சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் கைது

2 mins read
04f610c3-2843-44ac-94a8-5ba27fba151e
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள். - படம்: த ஸ்டார்

புத்ரஜெயா: மலேசியாவில் ஊழல் விசாரணை தொடர்பில் சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் புரிந்ததாக நம்பப்படும் அதிகாரிகளிடமிருந்து 4.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேரில் 11 பேர் சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்று நம்பப்படுகிறது.

இதர, ஆறு சந்தேக நபர்கள் நிறுவனத்தின் இயக்குநர்கள், ஊழியர்கள் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 28,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு யமஹா எக்ஸ்மேக்ஸ், 200,000 ரிங்கிட்டுக்கு மேல் மதிப்புள்ள டயோட்டா ஆல்பர்ட் கார், ஒரு பிஎம்டபிள்யு கார், நகைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், ஒரு நிலப்பகுதி ஆகியவற்றையும் ஆணையத்தின் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று ‘த ஸ்டார்’ ஊடகம் குறிப்பிட்டது.

இவை, தற்போது வரை ஆணையத்தின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் சில.

நிறுவனம் மற்றும் தனிப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அவ்வங்கிக் கணக்குகளில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களின் இதர வங்கிக் கணக்குகளையும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்தது.

முன்னதாக கைப்பற்றப்பட்ட 19 கொள்கலன்களையும் சோதனையிடுவதற்காக சுங்கத் துறை அதிகாரிகளுடன் ஊழல் தடுப்பு ஆணையம் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

அந்த கொள்கலன்களில் இருப்பது குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும் சோதனையிட்டபோது கொள்கலன்களில் எல்இடி விளக்குகள், சூரிய சக்தித் தகடுகள், மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் இருந்தன,” என்று அவ்வட்டாரம் குறிப்பிட்டது

இதற்கான வரி, பல மில்லியன் ரிங்கிட் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே தங்களுடைய துறை, பிரிவுகளில் நடைபெறும் ஊழல் பற்றி தெரிவிக்காதவர்கள் வேலை இழக்க நேரிடும் அல்லது குற்றவியல் வழக்குத் தொடுக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாகி தெரிவித்துள்ளார்.

தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் மேற்கொள்ளும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காத்தால் பொறுப்பில் உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இதுவும் தண்டனைகளில் அடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்