மலேசியா: சுகாதாரம், கல்வி, அரசியல் தொடர்புடைய விறுவிறுப்பான விவாதம்

மலேசியா: சுகாதாரம், கல்வி, அரசியல் தொடர்புடைய விறுவிறுப்பான விவாதம்

2 mins read
மலேசியாவில் பூமிபுத்திரர்களுக்கு முன்னுரிமை கொள்கை
fee45c7d-402b-4708-981c-9fe5992b28c6
படம். - தமிழ் முரசு

கோலாலம்பூர்: மலேசியாவில் தற்காலிக நடவடிக்கையாக மலாய் இன பூமிபுத்திரர்களுக்கு கல்வி கற்க அனுமதித்து வந்த மலேசிய டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் மற்ற இனத்தவரும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது மலேசியாவில், 1969ஆம் ஆண்டு வெடித்த இனக்கலவரத்துக்குப் பின்னர், 53 ஆண்டுகளாக பூமிபுத்திரர்களுக்கு சலுகை என்ற அடிப்படையில் வகுத்து செயல்படுத்தப்பட்டு வந்துள்ள புதிய பொருளியல் கொள்கை பற்றிய விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.

மலேசியாவில் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், இதய, நுரையீரல் அறுவை சிகிச்சை இன்றி சில மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில்தான், சீன, இந்திய இன மாணவர்கள் பூமிபுத்திரர் கல்விக்கென்றே உருவாக்கப்பட்ட மலேசிய டெக்னாலஜி பல்கலைக்கழத்தில் தற்காலிக நடவடிக்கையாக இதய அறுவை சிகிச்சை தொடர்பான முதுநிலைக் கல்வித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அனுமதி சரிதானா என்று மலேசியர்கள் விவாதித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் மலேசிய டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவின் பேராசிரியர் ராஜா அமின் ராஜா மொக்தார், பூமிபுத்திரர் அல்லாத மாணவர்களை தற்காலிகமாக முதுநிலை கல்வித் திட்டத்தில் இணைக்கலாம் என ஆலோசனை கூறியிருந்தார்.

இந்த யோசனையை பல்கலைக்கழக மாணவர்கள், மலாய் அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த விவாதம் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவரது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 2022ஆம் ஆண்டுத் தேர்தலை பல இனத்தவரையும் அரவணைக்கும் கூட்டணி என்ற அடிப்படையில் போட்டியிட்டு வென்றது.

ஆனால், எது எப்படியிருப்பினும் மிதவாத, நவீன இஸ்லாமியக் கொள்கையை ஏற்பதாகக் கூறும் அன்வார் இப்ராகிமின் கூட்டணி அரசு பெரும்பான்மை மலாய் இன மக்களை பகைத்துக்கொள்ள முடியாது என்பது உண்மை நிலை. அவர்கள் பூமிபுத்திரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய பொருளியல் கொள்கை மீது கை வைக்கக்கூடாது, மலேசிய டெக்னாலஜி பல்கலைக்கழகம் பூமிபுத்திரர்களுக்கு மட்டுமே ஆன கல்விக்கூடம் என்றும் அது பாதுக்காகப்பட வேண்டும் என்றும் மலாய் இனத்தவர் நினைக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகல்விமருத்துவம்

தொடர்புடைய செய்திகள்