சீனப் பிரதமர்: அடிலெய்டுக்கு பெய்ஜிங் இரு பாண்டாக்களை வழங்கும்

சீனப் பிரதமர்: அடிலெய்டுக்கு பெய்ஜிங் இரு பாண்டாக்களை வழங்கும்

2 mins read
84b60839-766a-41b2-81f1-036c9196788d
அடிலெய்ட் விலங்குத் தோட்டத்துக்குச் சென்ற சீனப் பிரதமர் லீ சியாங் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

சிட்னி: சீனப் பிரதமர் லீ சியாங், ஆஸ்திரேலியாவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதிக ஆரவாரமின்றி இடம்பெறும் இப்பயணத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) அவர் அடிலெய்ட் நகர விலங்குத் தோட்டம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். இவ்வாண்டின் பிற்பகுதியில் பெய்ஜிங், அடிலெய்ட் விலங்குத் தோட்டத்துக்கு இரு பாண்டாக் கரடிகளை வழங்கும் என்றும் திரு லீ அறிவித்தார்.

தற்போது அந்த விலங்குத் தோட்டத்தில் உள்ள இரு பாண்டாக்கள் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளன. அதற்குப் பிறகு பெய்ஜிங் மேலும் இரண்டு பாண்டாக்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் இரண்டாவது ஆக உயரிய பதவியில் இருக்கும் அதிகாரியான திரு லீ, ஏழு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் சீனப் பிரதமர் ஆவார். திங்கட்கிழமையன்று (ஜூன் 17) அவர் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசைச் சந்திப்பார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான அடிலெய்டை திரு லீ, சனிக்கிழமையன்று (ஜூன் 15) சென்றடைந்தார். சீன-ஆஸ்திரேலிய இருநாட்டு உறவு மீண்டும் சரியான பாதையில் இருப்பதாக அவர் சொன்னார்.

சீனா, ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகும். 2020ஆம் ஆண்டில் சீனா, வேளாண்மை, கனிமங்கள் ஆகியவை சார்ந்த பல வர்த்தகக் கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா மீது விதித்தது. அந்தக் காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே அரசதந்திர ரீதியாக கருத்துவேறுபாடுகள் இருந்தது அதற்குக் காரணமாகும்.

ஆனால் நிலைமை இப்போது குறிப்பிடத்தக்க வகையில் மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது ஆஸ்திரேலியப் பயணத்தின் முதல் அங்கமாக திரு லீ, ஞாயிற்றுக்கிழமையன்று சீனாவிடமிருந்து இரவலாகப் பெறப்பட்ட இரு பாண்டாக்கள் இருக்கும் அடிலெய்ட் விலங்குத் தோட்டத்துக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த சிலர் சீன தேசியக் கொடிகளைக் காட்டியதையும் வேறு சிலர் ‘இனி பாண்டா அரசதந்திரம் வேண்டாம்’ என்ற பொருளைக் கொண்ட ஆங்கில வார்த்தைகள் இடம்பெறும் குறிப்புகளை ஏந்தியிருந்ததையும் ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் குழுமத் (ஏபிசி) தொலைக்காட்சி காண்பித்தது.

அடிலெய்ட் விலங்குத் தோட்டத்தில் இருக்கும் பாண்டாக்கள் வரும் நவம்பர் மாதம் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்றும் அவற்றுக்குப் பதிலாக சீனா வழங்கவிருக்கும் பாண்டாக்களில் வேறு இரண்டை விலங்குத் தோட்டம் தேர்ந்தெடுக்கலாம் என்றும் திரு லீ அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்