தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் விவாகரத்துக்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம்: வழக்கு தொடுத்துள்ள வியாபாரி

1 mins read
6cd5cc62-6526-42eb-861b-33ca6b3968fb
ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்றார் பாதிக்கப்பட்ட ஆடவர். - படம்: பிக்சாபே

தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்.

தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்துவந்த அந்த ஆடவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.

ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தன.

குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ஆடவரின் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார்.

ஒரே மாதத்தில் மணவிலக்கு கோரினார் அவர்.

நடுத்தர வயதுடைய அந்த வியாபாரி, ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

விவாகரத்தின்போது தாம் இழந்த ஐந்து மில்லியன் பவுண்ட் தொகையை, நிறுவனத்திடமிருந்து பெற அவர் திட்டமிட்டுள்ளார்.

ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம்.

குறிப்புச் சொற்கள்