ஜோகூர் பாரு: அடுத்த முறை சுற்றுலாப் பயண முகவர்கள் மூலமாக விடுமுறையில் ஜோகூரிலிருந்து கோலாலம்பூருக்கு செல்ல வேண்டியிருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் டீசல் கட்டணக் கழிவு சுற்றுலா பேருந்துகளுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயண முகவர்கள் கட்டணத்தை உயர்த்தியிருக்கின்றனர்.
இது பற்றி பேசிய மலேசிய சீன பயண முகவர்கள் சங்கத்தின் (எம்சிடிஏ) ஜோகூர் பிரிவுத் தலைவர் எட்வின் டே , “சுற்றுலா பேருந்து கட்டணம் 10 விழுக்காடு வரை அதிகரிக்கும்,” என்று கூறினார்.
“ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு 250 ரிங்கிட் (S71) அதிகரிக்கும் என்றார் அவர்.
ஒட்டுமொத்த செலவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனை பயணிகள் ஏற்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்ல நிலம் வழியாக 320 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
“எம்சிடிஏ-யின் கீழ் உள்ள பெரும்பாலான முகவர்கள், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
“பயணத் திட்டங்களை இறுதி செய்யாதவர்களுக்கு புதிய கட்டணம் பற்றி தெரிவிக்கப்படும்,” என்று திரு டே குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்து அமைச்சரான ஆண்டனி லோக்கின் அறிக்கையில் சுற்றுலாப் பேருந்துகள் அன்றாடப் பயன்பாட்டுக்கு இல்லாததால் சுற்றுலாத் துறைக்கு டீசல் கழிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுற்றுலாப் பேருந்துகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்வதில்லை என்பதால் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திரு டே வலியுறுத்தியுள்ளார்.

