வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் பற்றி சீனா அதிகம் நாட்டம் கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவாளிகள் தெரிவித்து உள்ளனர்.
யார் அதிபராக வருவார் என்பது பற்றி சீனா கவலைப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் நேரடி விவாதம் நடைபெற உள்ள வேளையில் அமெரிக்க உளவுத் துறை இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளது.
திரு பைடன், திரு டிரம்ப் ஆகிய இருவரில் யாருக்கு முன்னுரிமை அளிப்பதில் சீனாவிடம் தெளிவில்லை என்பதை உளவுத் துறை அறிந்திருப்பதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
உலகின் இரண்டு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைய அண்மையில் உயர்மட்ட சந்திப்புகள் நடைபெற்றபோதிலும் அவற்றுக்கு இடையில் நீண்டகாலமாக நீடிக்கும் கசப்பு இனியும் தொடரும் சாத்தியம் இருப்பதாக பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகளும் வாஷிங்டன்னில் உள்ள அவர்களின் சகாக்களும் நம்புகின்றனர்.
அண்மைய ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொழில்நுட்பம் முதல் மனித உரிமைகள் மற்றும் தென் சீனக் கடல் விவகாரம் வரை அனைத்திலும் உரசல் நிலவி வருகிறது.

