வகுப்பறையில் உடன்பிறப்புக்குப்பாலூட்டிய சிறுமிக்குப் பாராட்டு குவிகிறது

2 mins read
a160ea39-eb86-4d71-bf9d-d9c580f49df6
வகுப்பறையில் உடன்பிறப்புக்குப் பாலூட்டிய சிறுமியின் காணொளியை ஏறக்குறைய மூன்று மில்லியன் பேர் பார்த்துள்ளனர். - படம்: யிங்ஸே டிக்டாக்

பேங்காக்: தாய்லாந்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர், வகுப்பறையில் பாடங்களைச் செய்துகொண்டே உடன்பிறந்த குழந்தைக்குப் பாலூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி பாரட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த மே மாதம் அந்த 20 வினாடி காணொளி டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது.

அதில் ஒரு சிறுமி பாடங்களை எழுதிக் கொண்டே, மற்றொரு கையால் குழந்தையை ஆட்டியபடி பாலூட்டுகிறார்.

அந்த குழந்தை அமைதியாக பாட்டிலில் உள்ள பாலைக் குடிக்கிறது. ஒரு கட்டத்தில் தனது மூத்த சகோதரியின் கன்னத்தை குழந்தை தடவுகிறது.

ஏறக்குறைய மூன்று மில்லியன் பேர் பார்த்துள்ள இந்தக் காணொளி, 226,000 பேர் விருப்பம் தெரிவித்து, ஏறக்குறைய 3,000 பேர் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

பிரச்சின் புரி என்ற இடத்தில் உள்ள பான் குலோங் காயிம் சாம் பள்ளியின் ஆசிரியரான யிங்ஸ் அந்தக் காணொளியைப் பதிவேற்றியிருப்பதாக ‘தாய் பிபிஎஸ் வேர்ல்ட்’ தெரிவித்தது.

அந்தச் சிறுமி அவரது குடும்பத்தில் மூத்த மகள் என்று காணொளியின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது தாயார் வேலை செய்யும்போது அவர் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது.

“உங்களுடைய உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொள்ள, பள்ளிக்கு வராமல் இருப்பதைவிட இது சிறந்த வழியல்லவா,” என்று தலைப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என சக மாணவிகளிடம் மாணவி தெரிவிப்பார் என்று ஆசிரியர் யிங்ஸ் தனது குறிப்பில் கூறியிருந்தார்.

டிக்டாக் பதிவாளர்கள், வலுவானவள், நல்ல குழந்தை என்று குறிப்பிட்டு அவரைப் பாராட்டியிருந்தனர்.

View post on TikTok
குறிப்புச் சொற்கள்