இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலைத் தடுக்கஅரசதந்திர உடன்பாட்டுக்கு அமெரிக்கா அழைப்பு

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலைத் தடுக்கஅரசதந்திர உடன்பாட்டுக்கு அமெரிக்கா அழைப்பு

2 mins read
2f59c4d0-461f-40c8-984f-dee00613153d
தெற்கு லெபனானிய நகரமான கியாமில் குண்டுகள் வீசப்பட்டதால் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: இரு தரப்பு எல்லையில் உள்ள இஸ்ரேலியர்களும் லெபனானியர்களும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதை அனுமதிக்கும் ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதற்கு அரசதந்திர வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சரான லாயிட் ஆஸ்டின் ஜூன் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

தெற்கு எல்லையில் வெடிகுண்டுகள் வீசப்படுவதால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மற்றொரு போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

“ஹிஸ்புல்லாவின் ஆத்திரமூட்டும் செயல் இஸ்ரேலையும் லெபனானிய மக்களையும் அவர்கள் விரும்பாத போருக்கு இட்டுச் செல்கிறது. இதில் அப்பாவி இஸ்ரேலிய, லெபனானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்று திரு ஆஸ்டின் குறிப்பிட்டார்.

“இந்தப் பிரச்சினைக்கு அரசதந்திர வழியில் தீர்வு காணப்பட வேண்டும். தெற்கு இஸ்ரேலில் அமைதி ஏற்பட அரசதந்திர உடன்பாடு தேவை. அப்போதுதான் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பாக திரும்ப முடியும்,” என்றார் அவர்.

இந்நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகரான ஸாச்சி ஹனேஜ்பி, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற பெரும் ஆயுதங்களைக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்புடனான பிரச்சினைக்குத் தீர்வுகாண வருகின்ற வாரங்களை செலவிடப் போகிறோம். அரசதந்திர தீர்வையே விரும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கைகளுக்கு முடிவு ஏற்படும் சாத்தியம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது, ஹிஸ்புல்லாவுடன் உடன்பாடு ஏற்பட வழி வகுக்கும்.

காஸா போரைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலுடன் மோதி வருகின்றனர்.

இதற்கிடையே காஸா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் ஏராளமான குண்டுகளை வீசியதாகவும் இரவு முழுவதும் ராஃபாவில் கடுமையான சண்டை நடைபெற்றதாகவும் ஜூன் 26ஆம் தேதி காஸா வட்டார மக்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்