சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்போர் விரைவில் திமோர் லெஸ்டேக்கு விசா இன்றி குறுகியகாலப் பயணம் மேற்கொள்ள முடியும்.
அதற்கான உடன்பாட்டில் வியாழக்கிழமை (ஜூன் 27) இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
திமோர் லெஸ்டே வெளியுறவு அமைச்சர் பென்டிட்டோ டாஸ் சன்டோஸ் ஃபிரெய்டாஸ் ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூருக்கும்-திமோர் லெஸ்டே பயணத்துக்கான விசாவை நீக்குவதற்கான உடன்பாட்டில் அவரும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கையெழுத்து இட்டதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அந்த இருதரப்பு விசா ரத்து உடன்பாட்டின்கீழ் சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்போர் திமோர் லெஸ்டேயில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கி இருக்க அனுமதிக்கப்படுவர்.
அதேபோல, திமோர் லெஸ்டே கடப்பிதழை வைத்திருப்போர் சிங்கப்பூரில் 30 நாள்கள் விசா இன்றி தங்கலாம்.
“ஆசியானில் திமோர் லெஸ்டே முழுமையாக இணைவதற்கான திட்டத்திற்குத் தேவைப்படும் அம்சங்களைப் பூர்த்தி செய்ய இந்த உடன்பாடு பங்களிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“அத்துடன், சிங்கப்பூர்-திமோர் லெஸ்டே இடையில் மக்களோடு மக்கள் கொண்டிருக்கும் உறவை வலுப்படுத்தவும் இது உதவும்,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.
திமோர் லெஸ்டேயின் ஆசியான் இணைப்புத் திட்டம் 2023 மே 10ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திரு ஃபிரெய்டாஸ் வியாழக்கிழமை (ஜூன் 27) சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நீண்ட, தோழமை உறவை வரவேற்றுப் பேசினார்
ஆசியானில் தற்போது 10 உறுப்பு நாடுகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் திமோர் லெஸ்டே முதல்முறை பார்வையாளராகப் பங்கேற்றது.
ஆசியானின் ஓர் அங்கமாக திமோர் லெஸ்டே சேர்வதற்குத் தேவைப்படும் அம்சங்களைத் தமது நாடு பூர்த்தி செய்யும் என்று அப்போதைய பிரதமர் தாவுர் மாத்தான் ருவாக் உறுதிபடத் தெரிவித்து இருந்தார்.
திமோர் லெஸ்டே ஆசியாவின் ஆக இளைய ஜனநாயக நாடு. கடந்த 2002ஆம் ஆண்டு அது இந்தோனீசியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக உருவானது. ஆசியானில் உறுப்பினராகச் சேருவதற்கான நடைமுறைகளில் அந்நாடு உடனடியாக இறங்கியது.
இருப்பினும் உறுப்பினர் விண்ணப்பத்தை 2011ஆம் ஆண்டுதான் அது சமர்ப்பித்தது.

