1960க்குப் பிறகு பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற அதிபர் தேர்தல் விவாதம்

2 mins read
1372ea09-721a-4e80-af41-f2e72f0dc20f
அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாத நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள அதிபர் ஜோ பைடனும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பும் பங்கேற்ற முதல் நேரடி விவாத நிகழ்ச்சி தொலைக்காட்சி அரங்கில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது.

1960ஆம் ஆண்டுக்குப் பிறகு, நேரடி பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற முதல் அதிபர் தேர்தல் விவாதமாக அது அமைந்துள்ளது.

ஆகக் கடைசியாக 1960ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் துணை அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கும் ஜனநாயகக் கட்சியின் அப்போதைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கென்னடிக்கும் இடையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் விவாதத்தின்போது அரங்கிற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதன் பிறகு 16 ஆண்டுகள் நேரடி விவாதம் இன்றி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

1976ஆம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி இடம்பெற்றபோது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போதைய அதிபர் ஜெரல்ட் ஃபோர்டுக்கும் முன்னாள் ஜியார்ஜியா ஆளுநரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிம்மி கார்ட்டருக்கும் இடையிலான விவாத நிகழ்ச்சி அது.

அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வோர் அதிபர் தேர்தல் நேரடி விவாத நிகழ்ச்சியிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்று பரவிய 2020ஆம் ஆண்டில்கூட திரு பைடனும் திரு டிரம்ப்பும் பங்கேற்ற இரு விவாத நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இந்த முறை தேர்தலுக்கான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 9 மணிக்குத் தொடங்கியது. ஜியார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் சிஎன்என் தொலைக்காட்சி அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி 90 நிமிடங்கள் நடைபெற்றது.

கையில் குறிப்புகளை எடுத்துவர இரு வேட்பாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. பேனா, காகிதம், தண்ணீர் போத்தல் ஆகியன இருவருக்கும் வழங்கப்பட்டன.

யார், எந்தப் பக்கம் நின்று விவாதத்தைத் தொடங்குவது என்பது பூவா தலையா போட்டு முடிவு செய்யப்பட்டது.

தொலைக்காட்சி நேரடி விவாதத்தை இரு படைப்பாளர்கள் வழிநடத்தினர்.

இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான அடுத்த நேரடி விவாத நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி ஏபிசி தொலைக்காட்சி அரங்கில் நடைபெறும்

குறிப்புச் சொற்கள்