நேரடி விவாதத்தில் தடுமாறிய பைடன்

2 mins read
cdf3fc51-9726-42a1-8953-ddca192de6f0
ஜியார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் உள்ள சிஎன்என் தொலைக்காட்சி அரங்கில் நேரடி விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் (வலது). - படம்: எஎஃப்பி

அட்லாண்டா: அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தில் பங்கேற்றபோது தற்போதைய அதிபர் ஜோ பைடன் தடுமாறியதைக் காணமுடிந்தது.

வயது காரணமாக அவரது செயல்திறன் மாற்றம் ஜனநாயகக் கட்சியினரின் கவலைகளை அதிகப்படுத்தி உள்ளது. நவம்பர் மாதத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பைத் தோற்கடிக்கும் திறன் தங்களது கட்சி வேட்பாளருக்கு உண்டா என்பது குறித்த கவலையும் அவர்களிடம் ஏற்பட்டு இருப்பதாகச் செய்திகள் கூறின.

கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாகப் பதில் அளித்தபோது ஒருகட்டத்தில் அவர் சற்று நிறுத்தி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திணறியதுபோலத் தோன்றியது.

மேலும், அவர் அளித்த எண்ணிக்கைகளிலும் குளறுபடி இருந்தது.

குறிப்பாக, தமது நிர்வாகத்தில் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை, மருத்துவச் செலவுகளுக்குக் கையிலிருந்து செலவிடப்படும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு போன்றவை தொடர்பாக திரு பைடன் அளித்த எண்ணிக்கை மாறுபட்டு இருந்தது.

திரு பைடனிடம் காணப்பட்ட நடுக்கமான செயல்திறன் அவரது பிரசாரத்தின் மதிப்பை குறைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம், எதிர்த்தரப்பினர் குறைகூறுவதற்கும் அது வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

திரு பைடனுக்கு 81 வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றில் ஆக வயதான அதிபர் இன்னொரு நான்காண்டுகளுக்குச் சேவை புரிவதற்குப் பொருத்தமான உடல்திறனைப் பெறவில்லை என்று குடியரசுக் கட்சியினர் ஏற்கெனவே தாக்கிப் பேசிவரும் நிலையில் திரு பைடனின் திணறல் அதனை அதிகப்படுத்துவதுபோல அமைந்துள்ளது.

திரு பைடனின் தடுமாற்றத்தை திரு டிரம்ப் பயன்படுத்திக்கொண்டு குடிநுழைவு தொடர்பான விவாதத்தின்போது துடிப்புடன் தமது கருத்துகளைப் பதிவு செய்தார்.

“இது தொடர்பாக அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. தான் சொன்னதுகூட அவருக்குப் புரிந்ததா என்பதும் தெரியவில்லை,” என்றார் திரு டிரம்ப்.

திரு பைடன் சளித் தொந்தரவால் சிரமப்படுவதாக அதுபற்றி அறிந்தவர்கள் கூறினர்.

நேரடி விவாதத்தின்போது டிரம்ப்பிடமும் தடுமாற்றம் காணப்பட்டது.

ஓபியாய்ட் செயற்கை மருந்தின் அடிமைத்தனத்துடன் அமெரிக்கர்கள் போராடி வருவது குறித்து கேட்கப்பட்டபோது, குடிநுழைவு விவகாரம் பற்றியும் செய்தியாளர் ஒருவரை ரஷ்யா தடுத்து வைத்தது குறித்தும் டிரம்ப் பேசினார்.

வயது தொடர்பான விவாதம் நடைபெற்றபோது, “என்னைவிட மூன்று வயது இளையவராக இருந்தாலும் போதுமான திறமை அவரிடம் இல்லை,” என்று டிரம்ப்பை குறிப்பிட்டு திரு பைடன் பேசினார்.

“நான் சாதித்ததையும் நான் செய்த நற்செயல்களையும் நினைத்துப் பாருங்கள்,” என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிபர் தேர்தலுக்கான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 9 மணிக்குத் தொடங்கி 90 நிமிடங்கள் நடைபெற்றது.

ஜியார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் சிஎன்என் தொலைக்காட்சி அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி 90 நிமிடங்கள் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்