பிற்பகலில் மதுபானம்: தாய்லாந்தின் 52 ஆண்டு தடை நீக்கப்படலாம்

பிற்பகலில் மதுபானம்: தாய்லாந்தின் 52 ஆண்டு தடை நீக்கப்படலாம்

1 mins read
78a10317-c956-4e0b-b27e-c72e0a793848
தாய்லாந்தில் பிற்பகல் வேளையில் மதுபானம் வாங்குவதற்கு எதிரான தடை 52 ஆண்டுகளாக நடப்பில் உள்ளது. - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்தில் பிற்பகல் வேளையில் மதுபானம் வாங்குவதற்கு எதிரான தடை 52 ஆண்டுகளாக நடப்பில் இருந்து வருகிறது.

சுற்றுப்பயணத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், அத்தடையை நீக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு, பயனீட்டாளர்கள் அதிகம் செலவு செய்யாதிருப்பது ஆகிய காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

“பிற்பகல் இரண்டிலிருந்து ஐந்து மணிவரை மதுபானம் விற்பதற்கு எதிராக நடப்பில் உள்ள தடையை நீக்க உணவக உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளைப் பிரதமர் ஸ்ரெத்தா பரிசீலனை செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறார்,” என்று தாய்லாந்து அரசாங்க இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற்பகலில் மதுபானம் விற்க நடப்பில் இருக்கும் தடை நீக்கப்பட்டால் அது தாகத்துடன் இருக்கும் சுற்றுப்பயணிகளுக்கு திருப்திதரும் ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது. தாய்லாந்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 38 டிகிரி செல்சியசாகப் பதிவாகி வருகிறது.

மேலும், இந்நடவடிக்கையால் மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவை பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தின் உணவக வர்த்தகக் குழு, வர்த்தகத்துக்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிக்கை விடுத்து செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 2) திரு ஸ்ரெத்தாவுக்குக் கடிதம் அனுப்பியது. பிற்பகல் வேளையில் மதுபானம் வாங்க நடப்பில் இருக்கும் தடையை நீக்குவதும் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்