வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று நாளுக்குநாள் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஜூலை 3ஆம் தேதி நடைபெற்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், ஆளுநர்கள் கூட்டத்தில் அவர் விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் கவலைப்படும் உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று திரு ஜோ பைடன், 81, பிரசாரக் குழுவிடம் தெரிவித்தார் என்று தகவலறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“என்னை யாரும் வெளியே தள்ளவில்லை. நான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை,” என்று மற்றொரு மின் அஞ்சலில் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதனை உலகமே எதிர்பார்க்கிறது.
அண்மையில் முன்னால் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நடைபெற்ற விவாதத்தில் ஜோ பைடன் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தடுமாறினார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியில் உள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
ஜூலை 3ஆம் தேதி மாலையில் மெய்நிகர் வழியாக அதிபர் ஜோ பைடன், 24 ஜனநாயகக் கட்சி ஆளுநர்களையும் வாஷிங்டன் டிசி மேயரையும் சந்தித்தார். அப்போது கட்சிக்காக உழைக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு நியூயார்க், மின்னசோட்டா, மேரிலாண்ட் ஆகியவற்றின் மூன்று ஆளுநர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜோ பைடனுக்கு ஆதவராக இருப்போம் என்று அவர்கள் மூவரும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“எங்களுக்குப் பின்னால் எப்போதும் அதிபர் பைடன் இருக்கிறார். அவரது பின்னால் நாங்கள் இருப்போம்,” என்று மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஜனநாயகக் கட்சியின் ஆகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவரான நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்ஸ், அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு ஒருவர் பொதுவெளியில் கோரிக்கை விடுப்பது இதுவே முதல் முறை.
ஜனநாயகக் கட்சியின் பல பெரிய நன்கொடையாளர்களும் இதற்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

