பிரிட்டனில் ஆட்சியைப் பிடித்தது தொழிற்கட்சி

2 mins read
ca1bb60b-eb46-42fb-bbf9-ecec8555adef
தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 61 வயது திரு ஸ்டார்மர் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரும்பான்மை பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி ஜூலை மாதம் 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 412 தொகுதிகளை திரு கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.

லிபரல் டெமோகிராட்ஸ் கட்சி 71 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி 9 இடங்களில் வென்றது.

ஒரு சில தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 61 வயது திரு ஸ்டார்மர் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் ஜூலை 5ஆம் தேதி மாலை, மன்னர் சார்ல்ஸ் அவரை அதிகாரபூர்வமாக அடுத்த பிரிட்டிஷ் பிரதமராக நியமித்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சி மிக மோசமான வகையில் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் தமது பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

14 ஆண்டுகளாகப் பிரிட்டனை ஆண்டு வந்த கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளபோதிலும் வடஇங்கிலாந்தில் உள்ள தமது தொகுதியை திரு சுனக் தக்கவைத்துக்கொண்டார்.

திரு ஸ்டார்மர் பிரிட்டனை ஆளும் புதிய அரசாங்கத்தைக் கூடிய விரைவில் அமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றதும் மத்திய லண்டனில் நடத்தப்பட்ட தொழிற்கட்சிப் பேரணியில் பேசிய திரு ஸ்டார்மர், பிரிட்டனை ஆட்சி செய்யும் முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.

நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சூளுரைத்தார்.

இதற்கிடையே, ஆகக் குறுகிய காலத்திற்குப் பிரிட்டனின் பிரதமராகப் பதவி வகித்த திருவாட்டி லிஸ் டிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

630 வாக்குகள் வித்தியாசத்தில் தொழிற்கட்சி வேட்பாளரிடம் அவர் நோர்ஃபோக் சவுத் வெஸ்ட் தொகுதியை இழந்தார்.

திருவாட்டி டிரஸ், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்.

திருவாட்டி டிரஸ் 2010ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

2022ஆம் ஆண்டில் அவர் வெறும் 49 நாள்களுக்கு மட்டுமே பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி வகித்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் திரு கியர் ஸ்டார்மருக்கும் தொழிற்கட்சிக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரும் பிரிட்டனும் நீண்டகால, வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைப் பகிர்ந்துகொள்வதாக அவர் சொன்னார்.

“நாம் வர்த்தகம், முதலீடு, நிதி, தற்காப்பு, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களில் ஒத்துழைக்கிறோம். நமது உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த, திரு ஸ்டார்மருடனும் அவரது குழுவினருடனும் பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்