ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் விடாமல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூலை 8ஆம் தேதி) தெரிவித்தனர்.
இதில் குறைந்தது 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் 18 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுலாவேசி தீவிலுள்ள சுவாவா வட்டாரத்தின் கோரோன்டாலோ பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் ஒரு சட்டவிரோத தங்கச் சுரங்கம் உள்ளது.
அதன் அருகில் வசிக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் நிலச்சரிவு காரணமாக இறந்துள்ளனர் என்று அப்பகுதியைச் சேர்ந்த மீட்புப் பணி மேற்கொள்ளும் அமைப்பின் தலைவர் ஹெரியன்டோ தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஐவர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் காணாமல் போன 18 பேரைத் தேடும் பணி தொடர்வதாகவும் திரு ஹெரியன்டோ கூறினார்.
“தேசிய மீட்புக் குழு, காவல்துறை, ராணுவத் துறையினர் என 164 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று திரு ஹெரியன்டோ விளக்கினார்.