தாய்லாந்து பிரதமரை நீக்கக் கோரும் வழக்கு ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 mins read
19ff6354-e76a-49c9-b4b0-065ab3606b41
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விசாரணை ஜூலை 24ஆம் தேதிக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 10) அன்று ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வெளிவரும் என இம்மாத தொடக்கத்தில் நீதிமன்றம் தெரிவித்தது.

“முன்பு அழைப்பாணை அனுப்பப்பட்ட நபர்களிடமிருந்து சான்றுகள் உட்பட கூடுதல் தகவல்களை நீதிமன்றம் கோருகிறது,” என்று ஓர் அறிக்கையில் அதற்கான காரணத்தை நீதிமன்றம் விளக்கியிருந்தது.

ராணுவத்தால் நியமிக்கப்பட்ட செனட்டர்கள் 40 பேர் மே மாதம் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஸ்ரேத்தாவுக்கு எதிரான வழக்கு தொடங்கப்பட்டது. பின்னர் அது அரசியலமைப்பு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக சிறைவாசம் அனுபவித்த வழக்கறிஞர் பிச்சிட் சுயென்பானுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது தொடர்பில் பிரதமரை நீக்க இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

அரசியல் சாசனத்தின்படி அமைச்சர்களுக்கான தார்மீக மற்றும் நெறிமுறை தரங்களை பிச்சிட் இழந்து விட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பிச்சிட் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் ஸ்ரேத்தாவும் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அரசியலுக்குப் புதியவரான ஸ்ரேத்தா, பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டியிருக்கும். ஆளும் பியூ தாய் கட்சி, நாடாளுமன்றம் வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் பதவிக்கு புதியவர் ஒருவரை முன்மொழிய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்