பெட்டாலிங் ஜெயா: அண்மையில் இணையப் பகடிவதை காரணமாக மலேசியாவைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமும் தன்னார்வலருமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி அப்பாஹு உயிரை மாய்த்துக்கொண்டார்.
மரணத்துக்கு ஒரு நாள் முன்பு, தமக்கு எதிராக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் இணையம் மூலம் தம்மைக் கேலி செய்வதாகவும் 30 வயது ராஜேஸ்வரி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
ஜூலை 5ஆம் தேதியன்று அவர் தமது வீட்டில் மாண்டு கிடந்தார்.
ராஜேஸ்வரியின் மரணத்தை அடுத்து, 35 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இரண்டாவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள செதாபாக் பகுதியில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் 40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ராஜேஸ்வரியின் மரணத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் இணையப் பகடிவதைக்கு எதிராகக் கோபக் குரல்கள் எழுந்துள்ளன.

