ஹனோய்: வியட்னாமில் மின்சிகரெட்டுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
அவர்களில் பெரும்பாலோர் மோசமான மின்சிகரெட் நச்சுக்கு ஆளான இளையர்கள்.
இவ்வாண்டு முற்பாதியில் அத்தகையோர் சுமார் 100 பேரைக் கையாண்டதாக ஹனோயில் உள்ள பாக் மாய் மருத்துவமனையின் நச்சுக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று அந்நகரில் 20 வயது ஆடவர் ஒருவர் மயக்கநிலைக்குச் சென்றதையடுத்து அவசரமாக பாக் மாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அன்று அதிகாலை நான்கு மணியளவில் அவரின் குடும்பத்தார் விநோதமான சத்தத்தைக் கேட்டனர். தசைத் துடிப்புக்கு ஆளான அந்த ஆடவர் நினைவிழந்த நிலையில் இருந்தார். அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு அவர் நச்சுக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மாற்றப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அவரால் மூச்சுவிட முடியவில்லை. ஆடவரின் பல்வேறு உறுப்புகள் சேதமடைந்தன. அவர் மூளை, இதயப் பிரச்சினைகளுக்கும் ஆளானார். அவரின் சிறுநீரகம் செயலிழந்தது.
அந்த ஆடவர் பயன்படுத்திய மின்சிகரெட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கஞ்சா மாதிரியான போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. பல ஆண்டுகளாக மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய அவர், ஏற்கெனவே மின்சிகரெட் நச்சுக்கு ஆளாகி சென்ற ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நச்சுக் கட்டுப்பாட்டு நிலையத்தின் இயக்குநரான டாக்டர் கையன் ட்ரங் கையன், “2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் மின்சிகரெட் நச்சுக்கு ஆளான ஏறத்தாழ 100 பேரை நிலையம் கையாண்டது. ஒப்புநோக்க 2022, 2023ஆம் ஆண்டு முழுவதும் சுமார் 130 பேர்தான் இதே காரணத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
“நோயாளிகள் பயன்படுத்திய மின்சிகரெட்டுகளில் போதைப்பொருள் இருப்பது பல சோதனைகளில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிக்கோட்டின் இல்லாத காரணத்தால் மின்சிகரெட்டுகள் கேடு விளைவிக்காது என்ற கருத்து பலரிடையே உள்ளது. குறிப்பாக பதின்ம வயதினரிடைய இந்தத் தவறான கருத்து காணப்படுகிறது.
மின்வர்த்தக இணையத்தளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மின்சிகரெட் பொருள்களை எளிதில் வாங்க முடிவதை வியட்னாமில் உள்ள ஹெல்த்பிரிட்ஜ் கனடா அமைப்பின் இயக்குநரான கையன் தி அன் குறிப்பிட்டார். அவற்றின் மூலம் தானும் தனது சக ஊழியர்களும் மின்சிகரெட்டுகளை வாங்க முயன்றபோது, சிறுவர்கள் பெற்றோரை ஏமாற்ற வகைசெய்யும் வண்ணம் அவற்றில் பொய்க் குறிப்புகள் இருந்ததாக அவர் சொன்னார்.
இந்நிலையில், வியட்னாமில் மின்சிகரெட்டுகள் போன்றவற்றை இறக்குமதி செய்வது, தயாரிப்பது, விநியோகிப்பது, விளம்பரப்படுத்துவது ஆகியவற்றை உடனடியாகத் தடைசெய்யுமாறு வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.