இணையப் பகடிவதை விவகாரம்: மூவருக்கு எதிராக ‘ஈஷா’வின் தாயார் காவல்துறையில் புகார்

1 mins read
7c92c82d-3af0-4aed-9958-79f00daf82e4
தமது மகள் ராஜேஸ்வரி மாண்ட பிறகும் அவரை இழிவுப்படுத்தும் வகையில் மூவர் காணொளி வெளியிட்டதாகவும் நேரலைக் காணொளி ஒன்றை ஒளிபரப்பியதாகவும் திருவாட்டி புஷ்பா பி. ராஜகோபால் கூறினார். அவர்களுக்கு எதிராக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: அண்மையில் இணையப் பகடிவதை காரணமாக ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி அப்பாஹு உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதையடுத்து, 35 வயது பெண்ணும் 44 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் மூன்று பேருக்கு எதிராக ராஜேஸ்வரியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த மூவரும் ராஜேஸ்வரியை இழிவுப்படுத்தும் வகையில் காணொளி வெளியிட்டதாகவும் நேரலைக் காணொளி ஒன்றை ஒளிபரப்பியதாகவும் திருவாட்டி புஷ்பா பி. ராஜகோபால் கூறினார்.

அவர்களில் ஒருவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று திருவாட்டி புஷ்பா கூறியதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.

“என் மகள் மாண்டுவிட்டார். அப்போதும் அவரைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். அவர் பணிவுடன் பேசவில்லை என்று கூறுகின்றனர், அதைக் கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்று திருவாட்டி புஷ்பா தெரிவித்தார்.

அந்த மூவரின் செயலால் கடந்த ஒரு வாரத்தில் தமக்கு இருமுறை நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இணையப் பகடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தாம் அனுபவித்த கொடுமைகளை வேறு எந்தத் தாயும் அனுபவிக்கக்கூடாது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்