வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வயது, சிந்தனைத் திறன் ஆகியவை பற்றி எழும்பியுள்ள கேள்விகள் அமெரிக்கர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிபர் வேட்பாளர் விவாதத்தில் திரு பைடன் பங்கேற்று அதனை மிக மோசமாகக் கையாண்டார். அதற்குப் பின் கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர் பங்கேற்ற முதல் தொலைக்காட்சி செய்தியாளர் மாநாட்டை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைப் பார்க்க கிட்டத்தட்ட 23 மில்லியன் பேர் திரண்டனர்.
திரு பைடன், டோனல்ட் டிரம்ப் பங்கேற்ற அதிபர் வேட்பாளர் விவாதத்தைக் கண்ட 51.3 மில்லியன் மக்களில் ஏறக்குறைய 45 விழுக்காட்டினர் அவரின் தொலைக்காட்சி செய்தியாளர் மாநாட்டைக் கண்டதாக நீல்சன் ஆய்வு நிறுவனம் கூறியது.
விளையாட்டுப் போட்டிகளைத் தாண்டி, அதிபர் பைடனின் கிட்டத்தட்ட ஒரு மணிநேர தொலைக்காட்சி செய்தியாளர் மாநாடுதான் இவ்வாண்டு ஆக அதிகமான மக்கள் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது.
ஏபிசி, சிபிஎஸ், என்பிசி போன்ற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்கள் வழக்கமாக ஒளிபரப்பும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு திரு பைடனின் செய்தியாளர் மாநாட்டை ஒளிபரப்பின.
இது தவிர மேலும் பல மில்லியன் கணக்கானோர் மின்னிலக்க செய்தித் தளங்களில் அவரது செய்தியாளர் மாநாட்டை பார்த்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இவர்களை நீல்சன் ஆய்வு நிறுவனம் கணக்கில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரு பைடன் தமக்கு முந்திய அதிபர்களைப்போல் தனிநபர் செய்தியாளர் மாநாட்டில் வழக்கமாக பங்கேற்பதில்லை என்பதால் ஜூலை 11ஆம் தேதியில் இடம்பெற்ற அவரது செய்தியாளர் மாநாடு புதுமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.