ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் பாண்டுங் நகருக்கும் இடையே ஓடும் அதிவேக ரயில் சேவை தொடங்கியதிலிருந்து அதன்வழி நான்கு மில்லியன் பேர் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று உள்ளூரில் வூஷ் என்றழைக்கப்படும் அதிவேக ரயில் சேவை தொடங்கியது. கடந்த ஒன்பது மாதங்களில் இத்தனை பேர் பயணம் செய்தது, பொதுமக்கள் அதிவேக ரயில் சேவை மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அதன் தொடர்பில் அவர்களிடையே காணப்படும் உற்சாகத்தையும் காண்பிப்பதாக அதிவேக ரயில் சேவையை நிர்வகிக்கும் பிடி கெரேட்டா செப்பாட் இந்தோனீசியா-சீனா அமைப்பின் பொது நிர்வாகியும் வர்த்தகச் செயலாளருமான திருவாட்டி எவா சைருனிசா கூறினார்.
இந்தோனீசியாவில் இயங்கும் அதிவேக ரயில் சேவை, தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் அத்தகைய முதல் சேவையாகும். ஜகார்த்தாவின் ஹலீம் நிலையத்தையும் மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள இந்தோனீசியாவின் நான்காவது ஆகப் பெரிய நகரான பாண்டுங்கின் டெகாலுவார் ரயில் நிலையத்தையும் அதிவேக ரயில் பாதை இணைக்கிறது. அப்பாதையில் செல்லும் ரயில்களால் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் போகமுடியும்.
மேலும், மூன்று மணிநேரத்துக்கும் மேல் இருந்த அவ்விரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் புதிய அதிவேக ரயில் சேவையால் சுமார் 40 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
வூஷ் ரயில் சேவை, பல்வேறு துறைகளுக்குப் பலனளித்திருப்பதாக திருவாட்டி எவா சொன்னார். குறிப்பாக அந்த வட்டாரத்தில் சுற்றுப்பயணத் துறை போன்றவை பலனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

