முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்ற செய்தி அறிந்து தாம் அதிர்ச்சியுற்றதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
“திரு டோனல்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் நல்லமுறையில் தேறி வருவதாகவும் அறிந்த பின்னர் நிம்மதி அடைந்தேன்,” என்று திரு வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “அந்த மூடத்தனமான தாக்குதலில் மரணமுற்றவரின் குடும்பத்தையும் காயமடைந்தோரையும் நாம் நினைவில்கொள்வோம்.
“என்னதான் கருத்துவேறுபாடுகள் இருப்பினும் வன்முறைக்கு நாம் ஒருபோதும் இடம் தரலாகாது,” என்றார்.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 13) பென்சில்வேனியா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது டிரம்ப் சுடப்பட்டார்.