காஸா போர்நிறுத்தப் பேச்சில் இருந்து விலகியதாக ஹமாஸ் தரப்பு தகவல்

2 mins read
31c10a9e-5f9f-45d0-a785-7f30b88b59f0
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிதையுண்ட முகாம். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: காஸாவில் நீடிக்கும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இருந்து ஹமாஸ் குழு விலகிவிட்டதாக அக்குழுவின் மூத்த தலைவர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கூறினார்.

இஸ்ரேல் தொடர்ந்து படுகொலையில் ஈடுபட்டு வருவதையும் பேச்சுவார்த்தையில் அது நடந்துகொள்ளும் விதத்தையும் கவனத்தில் கொண்டு, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டாம் என்று ஹமாஸ் குழு முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சனிக்கிழமை ஹமாஸ் குழுவின் ராணுவத் தலைவர் முகம்மது டெய்ஃப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் தப்பிவிட்டதாகவும் தற்போது நன்றாக இருப்பதாகவும் மற்றொரு ஹமாஸ் தலைவர் கூறினார்.

தெற்கு காஸாவில் பெரிய அளவில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் அந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 92 பேர் உயிரிழந்ததாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட ஆகப்பெரிய தாக்குதல் அது.

“தளபதி முகம்மது டெய்ஃப் நன்றாக உள்ளார். எஸெடின் அல்-காஸம் படைப்பிரிவை நேரடியாக மேற்பார்வையிட்டு, தாக்குதல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்,” ஹமாஸின் ஆயுதப் படையைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்தார்.

தனது குழுவின் தலைவர்களுக்குக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுவது பொய் என்றும் தாக்குதலை நியாயப்படுத்த அது அவ்வாறு சொல்லி வருவதாகவும் ஹமாஸ் குறிப்பிட்டு உள்ளது.

வீடுகள் மீது குண்டுமழை: 17 பாலஸ்தீனர்கள் மரணம்

இதற்கிடையே, காஸா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் குறைந்தபட்சம் 17 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் கூறினர்.

நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆகாயப் படைத் தாக்குதலில் அந்த உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய ராணுவம் ஆகாய வழியாகவும் தரைப்பகுதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக குடியிருப்பாளர்களும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
ஹமாஸ்காஸாஇஸ்‌ரேல்