வாஷிங்டன்: பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர்..
உலக நாடுகளின் அதிபர்களும் பிரதமர்களும் அரசியல் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
ஜூலை 13ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசெப் போரெல், தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ள முடியாத வன்முறைச் செயல்கள் மீண்டும் கண்கூடாக அரங்கேறியுள்ளது என்று அவர் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நமது சமூகத்தில் எந்த வடிவத்திலும் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை,” என்றும் அவர் சொன்னார்.
ஹங்கேரியின் தேசியவாதத் தலைவர் விக்டர் ஒர்பானும் இத்தாலியப் பிரதமர் கியோர்கியா மெலோனியும் டிரம்ப் நலமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி, துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி கேள்வியுற்று அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எனது நண்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மிகுந்த கவலையடைந்ததாகக் கூறினார்.
“அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை,” என்றார் திரு மோடி.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் அரசியல் தாக்குதல்களுக்கு எதிராகப் பேசியுள்ளார்.
“ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் எந்தவொரு வன்முறைக்கும் எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தானும் தனது மனைவி சாராவும், “டிரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.” என்றார்.
“அவரது பாதுகாப்புக்கும் விரைவில் குணமடையவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று நெட்டன்யாகு ஏஎஃப்பியுடம் கூறினார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், பயங்கரக் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக சொன்னார். முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.