அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மறக்க முடியாத படம்

2 mins read
9a382b17-ae51-4745-814b-eb71ab5ed6b0
மணிக்கட்டை உயர்த்தி போராடுவோம் என்று டிரம்ப் கூறிய படம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

டோனெகல்(பென்சில்வேனியா): முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், கொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பியது அதிபர் தேர்தலில் அவருக்குப் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே கருத்துக் கணிப்புகளில் அவர் முன்னணி வகிக்கிறார். இதில் ஜூலை 13ஆம் தேதி கொலை முயற்சி சம்பவம் அவருக்கு சாதகமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்லரில் நடந்த பேரணி மேடையிலிருந்து அழைத்துச் சென்றபோது அவரது முகத்தில் ரத்தம் வழிந்தது. சொத்துச் சந்தையின் செல்வந்தரும் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரமுமான டோனல்ட் டிரம்ப் மணிக்கட்டை உயர்த்தி ‘போராடுவோம்’ என்று முணுமுணுத்தார்.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், “எல்லாம் முடிந்தது. தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடுவார்,” என்றார்.

ஊடகங்களிடம் பேச அதிகாரமில்லாததால் அவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை.

“ரத்தம் தோய்ந்த முகத்துடன் மணிக்கட்டை உயர்த்திக் காட்டியது மறக்க முடியாத படமாக பரவலாகப் பகிரப்படும். இந்தப் படம் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். தேர்தல் பிரசாரத்தில் இந்தப் படம் முக்கிய அம்சமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்புக்கு அனுதாப அலை பரவியிருக்கிறது என்று கூறிய அவர், யாருக்கு வாக்குப் போடலாம் என்பது பற்றி முடிவு செய்யாத வாக்காளர்களிடம் டிரம்ப் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்.

டிரம்புக்கு எதிரான வழக்குகளும் அரசியல் துன்புறுத்தலாகவே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

டிரம்ப்புக்கு வெற்றி வாய்ப்பு கூடியிருக்கிறது என்று சோமர்செட் கவுன்டியின் வர்த்தக தொழில்சபை நிர்வாக இயக்குநர் ரோன் ஆல்டமும் கூறியுள்ளார்.

தன்னை ஒரு பழமைவாத வாக்காளராக வருணித்துக் கொண்ட அவர், அமெரிக்க அரசியலில் நாகரிகம் இல்லை என்று புலம்பினார். இந்தச் சம்பவம் தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் அவர் சொன்னார்.

“முழுவதையும் தொலைக்காட்சியில் பார்த்தோம், அவர் மேடையிலிருந்து இப்படி வருகிறார்,” என்று டிரம்ப் மணிக்கட்டை உயர்த்திக் காட்டியதைப் போல சைகைகாட்டி அவர் பேசினார்.

“ரீகன் சுடப்பட்டபோது ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று அவர் கூறியது எனக்கு நினைவில் இருக்கிறது,” என்று 1981ல் ரொனால்டு ரீகன் சுடப்பட்ட சம்பவத்தை தற்போது நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்