கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுக்கு இருமல் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அவரது செய்தித்தொடர்பாளர் ஜூலை 18ஆம் தேதியன்று வெளியிட்டார்.
99 வயது டாக்டர் மகாதீர் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நோய் நிலையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்னும் சில நாள்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
டாக்டர் மகாதீருக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதுண்டு.
அதன் காரணமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம், தொற்று காரணமாக அவர் தேசிய இதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அவர் வீடு திரும்பினார்.
கொவிட்-19 கிருமித்தொற்றாலும் அவர் முன்பு பாதிக்கப்பட்டார்.
டாக்டர் மகாதீர் மலேசியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்தார்.
1981ஆம் ஆண்டில் அவர் மலேசியாவின் பிரதமராக முதல்முறையாகப் பதவி ஏற்றார்.
22 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு 2003ஆம் ஆண்டில் பதவி விலகினார்.
பிறகு 2018ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பிரதமரானார்.
ஆனால் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவர் பதவி விலகினார்.